தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வெறும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் களமாகப் பார்க்கப்படாமல், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நிலைத்தன்மைக்கான மிக முக்கியமான அரசியல் பரிட்சையாக உருவெடுத்துள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச ‘மந்திர எண்’ 118 ஆகும். தற்போது முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், தவெகவின் நேரடிக் கூட்டணி பலம் 116 என்ற அளவிலேயே உள்ளது. வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிகளின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தயவிலேயே விஜய் அரசு 120 என்ற எட்டைத் தொட்டு ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஆனால், சமீபகாலமாகப் பணவீக்கம் மற்றும் அரசின் சில கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி தலைவர்கள் களமிறங்கிப் போராடி வருவதால், இந்த வெளி ஆதரவில் தொடர் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.
இத்தகைய சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமாவால் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றிபெற்றால், கட்சியின் நேரடி பலம் உயர்ந்து… இடதுசாரிகளின் வெளி ஆதரவை எதிர்பார்க்காமலேயே 118 என்ற பெரும்பான்மை பலத்தை நேரடியாகத் தொட்டுவிட முடியும். இது முதலமைச்சர் விஜய்க்கு ஆட்சி ரீதியாகவும், கூட்டணி அழுத்தங்களிலிருந்து விடுபடவும் மிகப்பெரிய பலத்தைத் தரும்.
மறுபுறம், இழந்த தொகுதிகளை மீட்டு தவெகவை 116 என்ற நிலையிலேயே முடக்கி வைத்துத் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க எதிர்க்கட்சியான அதிமுகவும், ஆளுங்கட்சியின் நிர்வாகப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள திமுகவும் தீவிரக் களப்பணியில் இறங்கியுள்ளன. இதனால், அக்டோபர் 6-ல் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் வெற்றி, விஜய் அரசின் எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் ‘டூ ஆர் டை’ (Do or Die) போட்டியாக மாறியுள்ளது.