சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் முக்கியப் பாதையாகத் திகழும் ஹொர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை (Unmanned Submarine) தங்களின் புரட்சிகரக் காவல் படை (IRGC) வெற்றிகரமாகச் சிறைபிடித்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வ வீடியோ ஆதாரத்துடன் அறிவித்துள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகளில், அமெரிக்கப் பாதுகாப்புக் நிறுவனமான ‘அண்டுரில்’ (Anduril) தயாரிப்பான 19 அடி நீளமுள்ள ‘டைவ்-எல்டி’ (Dive-LD) மாடல் நீர்மூழ்கிக் கலம் அலைகளுக்கு இடையே சிக்கியிருப்பதும், அதனை ஈரான் படையினர் கைப்பற்றுவதும் இடம்பெற்றுள்ளது. மிகவும் சிக்கலான உளவு நடவடிக்கை மூலம் பிடிபட்ட இந்த சப்மரைன், கடல்சார் கண்காணிப்பு மற்றும் சுரங்க எதிர்ப்புப் பணிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டது என ஈரான் படைத்தளபதிகள் உரிமை கோரியுள்ளனர்.
இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் இதுகுறித்துப் பேசுகையில், “வழக்கமான கடல்சார் ஆய்வில் ஈடுபட்டிருந்த எங்களின் பழமையான நீர்மூழ்கி ட்ரோன் ஒன்று, ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பழுதாகிச் செயலிழந்தது. அதில் எந்தவித ரகசியத் தரவுகளோ அல்லது ரகசிய சோனார் கருவிகளோ இடம்பெறவில்லை” என விளக்கமளித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணைத் தாக்குதல்களும் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த ஆளில்லா சப்மரைன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்மூழ்கிக் கலத்தைக் கைப்பற்றியதோடு, அமெரிக்காவின் எம்.க்யூ-1 (MQ-1) ரக ட்ரோன் ஒன்றையும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.