எகிப்தில் வாய் பிளந்தபடி அலறும் தோற்றத்தில் கண்டெடுக்கப்பட்டு, கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த 3,500 ஆண்டுகள் பழமையான ‘அலறும் பெண்’ (Screaming Woman) மம்மியின் மர்மத்தை அதிநவீன ‘சிடி ஸ்கேன்’ (CT Scan) தொழில்நுட்பத்தின் மூலம் எகிப்திய விஞ்ஞானிகள் இறுதியாகக் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 1935-ஆம் ஆண்டு எகிப்தின் லக்ஸார் பகுதி அருகே உள்ள மன்னர்கள் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெண் மம்மி, வாய் அகலத் திறந்தபடி பேரமைதியின் நடுவே கதறுவது போன்ற தோற்றத்தில் இருந்தது. பொதுவாக மம்மியாக்கம் செய்யும் போது உடலின் உறுப்புகள் அகற்றப்பட்டு உதடுகள் தைக்கப்படும். ஆனால், இந்த மம்மியில் உள்உறுப்புகள் எதுவும் அகற்றப்படவில்லை என்பதால், இது சரியாகச் செய்யப்படாத ஒரு “தரமற்ற மம்மியாக்கம்” என்றே பல தசாப்தங்களாகக் கருதப்பட்டு வந்தது.
கெய்ரோ பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் பேராசிரியை சாஹர் சலீம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் நடத்திய த்ரிடி (3D) சிடி ஸ்கேன் ஆய்வில், அந்தப் பெண் மம்மியாக்கம் செய்யப்பட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் பிற நாடுகளிலிருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர ஜூனிபர் மற்றும் சாம்பிராணி தைலங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த ஆடை, தலையில் இருந்த கருப்பு நிற விக் மற்றும் தங்க மோதிரங்கள் அவர் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் மூலம், அந்தப் பெண் மரணமடையும் போது அடைந்த சொல்லொணா வேதனை மற்றும் கடுமையான வலியின் காரணமாக ‘கேடவெரிக் ஸ்பாசம்’ (Cadaveric Spasm) எனப்படும் அரிதான தசை இறுக்க நிலையைத் உடனடியாக அடைந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மரணத்தின் போதே தசைகள் உறைந்துபோனதால், அவரது வாய் திறந்த நிலையிலேயே இறுகிப்போயுள்ளது. எகிப்திய உடற்பரிசோதனை நிபுணர்கள் அந்த முகத் தோற்றத்தை மாற்ற முடியாமல் அப்படியே மம்மியாக்கம் செய்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டு, 3,000 ஆண்டுகால வரலாற்றுச் புதிர்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.