சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் வசூலித்து அந்தரங்க வீடியோக்களைப் பகிர்ந்தது மற்றும் ஆபாசமாகப் பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி கட்டணம் பெற்றுக்கொண்டு ஆபாச உள்ளடக்கங்களைப் பரப்பியதாகத் திருச்சி சாதனா, தர்ஷா குப்தா உட்பட 12 சமூக வலைதளப் பிரபலங்கள் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இவர்களின் கணக்குகளை உடனடியாக முடக்குமாறு இணைய நிறுவனங்களுக்குக் காவல் துறை மின்னஞ்சல் அனுப்பியது.
காவல் துறையின் அதிரடி நடவடிக்கையை அடுத்து, திருச்சி சாதனாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் தற்போது முழுமையாக முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி சாதனாவைக் கைது செய்யச் சேலம் சைபர் கிரைம் தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாசத்தை விளம்பரப்படுத்தும் நபர் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை, இணையப் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.