Posted in

கூட்டுப் ராணுவப் பயிற்சிக்கு வடகொரியாவின் பதிலடி – ஜப்பான் கடலில் ஏவுகணை வீச்சு.. அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 5 நாட்கள் கூட்டுப் கடற்படை ராணுவப் பயிற்சி முடிவடைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் பல குறும்வரம்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிச் சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் வொன்சான் (Wonsan) பகுதியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 5:20 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமார் 250 கிலோமீட்டர் தூரம் பறந்து ஜப்பான் கடலில் (கிழக்குக் கடல்) விழுந்ததாகத் தென்கொரிய ராணுவத்தின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழு (JCS) உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஃபிரீடம் எட்ஜ்’ (Freedom Edge) என்ற பெயரில் 5 நாட்கள் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டுப் பயிற்சியைத் தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டே வடகொரியா இந்த ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது.

இந்த திடீர் ஏவுகணை வீச்சு குறித்து அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனை குறித்துத் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளுடன் இணைந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்; தற்போதைய ஆய்வுகளின்படி, இந்த சோதனையால் அமெரிக்க மண்ணுக்கோ அல்லது அதன் நட்பு நாடுகளின் எல்லைக்கோ எந்தவித உடனடி அச்சுறுத்தலும் (No immediate threat) இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவது பிராந்தியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனத் தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு நடுவே வடகொரியா மீண்டும் ராணுவ பலத்தைக் காட்டி வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.