Posted in

9/11 தாக்குதலுக்கு முன்பே பிரிட்டனை குறிவைத்தது ஏன்? – சிஐஏ ஆவணங்கள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!

2001-ஆம் ஆண்டு நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரிட்டன் மண்ணில் மாபெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவன் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாகக் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA) வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்கள் மூலம் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவையொட்டி, அமெரிக்க அதிபர்களுக்குத் தினமும் சமர்ப்பிக்கப்படும் இரகசிய உளவுத்துறை அறிக்கைகளின் (President’s Daily Brief – PDB) 71 பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. 1998 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட இந்த ஆவணங்களை சிஐஏ இயக்குனர் ஜான் ரட்க்ளிஃப் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில் 1998 ஆகஸ்ட் 28 மற்றும் டிசம்பர் மாதங்களில் தயாரிக்கப்பட்ட உளவுத்துறை குறிப்புகளில், அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளி நாடுகளான பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் சொந்த மண்ணில் தாக்குதல் நடத்த பின்லேடன் தீவிரமாக முயன்று வந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், விமானங்களைக் கடத்தி அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் நகரங்களில் மோதிக் கொடூரத் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டு வருவதாகவும் அக் காலகட்டத்திலேயே சிஐஏ எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இயங்கி வந்த அல்-கொய்தா அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர்களைப் பிரிட்டன் காவல்துறை 1999-ல் கைது செய்ததால் பின்லேடனின் இந்தத் திட்டம் தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்ததாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 9/11 தாக்குதலில் 67 பிரிட்டன் குடிமக்கள் உயிரிழந்த நிலையில், தாக்குதலுக்கு முன்பே பிரிட்டனைக் குறிவைத்துத் தீட்டப்பட்ட இந்தச் சதித்திட்டங்கள் குறித்த புதிய தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.