Posted in

உடைப்படுகிறதா ஐக்கிய இராச்சியம்? – சுதந்திர வாக்கெடுப்பு கோரி மூன்று பிராந்திய தலைவர்கள் அதிரடி கூட்டணி!

ஐக்கிய இராச்சியத்தின் (UK) அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து பிரிந்து தனிநாடாக இயங்குவதற்கும், சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தும் உரிமை கோரியும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் கார்டிஃப் (Cardiff) நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.

வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த மூன்று பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் சுதந்திரத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருப்பது லண்டன் பாராளுமன்றத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney), வேல்ஸின் முதன்மை அமைச்சர் ரூன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) மற்றும் வட அயர்லாந்தின் முதன்மை அமைச்சர் மிச்செல் ஓ நீல் (Michelle O’Neill) ஆகிய மூன்று தலைவர்களும் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசுகையில், மக்கள் விருப்பம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு பரிசீலிக்கப்படலாம் எனக் கூறியது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதேசமயம், அயர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஒன்றிணைந்த அயர்லாந்தைக் காண்பது மகிழ்ச்சியளிக்கும்” என கருத்து தெரிவித்தது சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போதைய நிலைத்தன்மை இனி நீடிக்காது என்றும், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரசு ஐக்கிய இராச்சியத்திற்குப் பிந்தைய எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த உடன்படிக்கை, ஐக்கிய இராச்சியத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.