உக்ரைன் தலைநகர் கியிவிலிருந்து போலந்து நாட்டின் வார்சா (Warsaw) நகருக்கு 206 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணியர் ரயிலின் என்ஜின் மீது, போலந்து எல்லைக்கு வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வோலின் (Volyn) பிராந்தியத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாகக் கடமையில் இருந்த ஊழியர்களின் முன்கூட்டிய எச்சரிக்கையால் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காரசாரமான கருத்துகளை வெளியிட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) உறுப்பு நாடான போலந்தின் எல்லைக்கு மிக அருகில் இயங்கும் ரயில்வே கட்டமைப்பு மற்றும் எரிபொருள் விநியோக மையங்களை ரஷ்யா வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குள் போரைப் பரப்பும் நோக்கில் ரஷ்ய அதிபர் புடின் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இந்த ட்ரோன் தாக்குதலால் ரயிலின் என்ஜின் பகுதியிலும் அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திலும் தீப்பிடித்ததை அடுத்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. வார்சா நோக்கிய ரயில் சேவை சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமான நிலைக்குப் பின், பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே மீண்டும் தொடர அனுமதிக்கப்பட்டது. சம்பவத்தின் போது போலந்து நாட்டின் எல்லைக்குள் எந்தவித வான்வெளி மீறலும் நடக்கவில்லை எனப் போலந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டமைப்பின் வாசலிலேயே ரஷ்யாவின் பயங்கரவாதம் தட்டிக்கொண்டிருப்பதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கு உக்ரைன் வழியே ஐரோப்பாவிலிருந்து வரும் இராணுவ மற்றும் வர்த்தகப் போக்குவரத்து வழித்தடங்களை முடக்கும் நோக்கிலேயே ரஷ்யா இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால், சர்வதேசக் அரசியல் களத்தில் உக்ரைன் – ரஷ்யப் போர் பதற்றம் மேலும் உச்சமடைந்துள்ளது.