பசிபிக் பெருங்கடலின் ஆழமான தரைப்பகுதியில் இதுவரை நிலப்பரப்பில் கண்டறியப்படாத அளவுக்கு மிக அதிக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி தாதுக்கள் நிறைந்த பிரம்மாண்டமான நீருக்கடியிலான படிமங்களைச் (Hydrothermal Deposits) சீன ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். ‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் மூலம் மேற் கொள்ளப்பட்ட 18 நாட்கள் ஆய்வில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
சிங்ஹுவா பல்கலைக்கழகம் மற்றும் சீனா கடல்சார் புவியியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு, பசிபிக் பெருங்கடலில் 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில் 7 முறை ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ஒரு டன் தாதுவில் 15.4 கிராம் வரை தங்கமும், 1.27 கிலோகிராம் வரை வெள்ளியும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமாக நிலத்தில் தோண்டி எடுக்கப்படும் தாதுக்களின் செறிவை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலடியிலுள்ள உயர் வெப்பநிலை நீரூற்றுகளின் (Hydrothermal Vents) மூலம் உருவாகியுள்ள இந்தச் கூம்பு வடிவ பாறைப் படிமங்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமல்லாது, செம்பு, இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய தொழில்முறை உலோகங்களின் கணிசமான தாதுக்களும் நிறைந்துள்ளன. இந்த முக்கியமான ஆய்வுப் பகுதி சீனாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆழ்கடலில் இருந்து தாதுக்களைத் தோண்டி எடுப்பதில் தொழில்நுட்ப சவால்களும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் இருந்தாலும், பொருளாதார ரீதியாக இந்த பகுதி மிகவும் மதிப்புமிக்கதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் ஆழ்கடல் கனிம வளங்களைக் கைப்பற்றுவதில் வல்லரசு நாடுகளுக்கு இடையே போட்டி நிலவி வரும் சூழலில், பசிபிக் பெருங்கடலில் சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.