பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் பல ஐரோப்பிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பயணித்த தூதரகச் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, உக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே ரஷ்யாவின் ட்ரோன் பயணிகள் ரயிலைத் தாக்கி அழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் இரயில்வே துறை ட்ரோன் அச்சுறுத்தலைக் கண்டறிந்து முன்கூட்டியே மேற்கொண்ட அவசரகால அட்டவணை மாற்றத்தால் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயில் முன்னதாகவே புறப்பட்டுச் சென்று நல்வாய்ப்பாகத் தப்பியது.
உக்ரைன் தலைநகர் கியிவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய மூலோபாய மாநாட்டில்’ (YES Conference) பங்கேற்றுவிட்டு, போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகள் வார்சா நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். நேட்டோ உறுப்பு நாடான போலந்து எல்லைக்கு வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாகோடின் (Yahodyn) ரயில் நிலையத்தில், இந்த தூதரக ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சரியாக அதே வழித்தடத்தில் அடுத்து நின்ற மற்றொரு பயணியர் ரயிலின் என்ஜின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலின் உண்மையான இலக்கு போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் பயணித்த தூதரக ரயிலாகத்தான் இருக்க அதிக வாய்ப்புள்ளது என உக்ரைன் தேசிய ரயில்வே நிறுவனமான ‘உக்ர்சாலிஸ்னிட்சியா’ (Ukrzaliznytsia) உத்தியோகபூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதே ரயில் நிலையத்தில் அமெரிக்க முன்னால் சிஐஏ இயக்குநர் டேவிட் பெட்ரேயஸ் பயணித்த மற்றொரு ரயிலும் நின்றிருந்த நிலையில், உக்ரைன் ரயில்வே துறையின் விரைவான பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பால் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், “புடின் எந்த வக்கிரமான எண்ணத்தில் இந்த தாக்குதலை நடத்தினார் எனத் தெரியவில்லை; உக்ரைனிய மக்கள் தினமும் சந்திக்கும் கொடூரத் தாக்குதலுக்கு இதுவே சான்று” என்று கடுமையாகச் சாடியுள்ளார். நேட்டோ எல்லையின் வாசலிலேயே ரஷ்யா நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள் மேலைநாடுகளுடனான போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனுக்குக் கூடுதல் வான்வழிப் பாதுகாப்பு ஆயுதங்களை விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.