Posted in

தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? தவெக-வினருக்குப் பாய்ந்த சீமான் கண்டனம்; அரசியல் களம் சுடசுட!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் மற்றும் அதிகாரம் குறித்துப் பொதுவாகப் பேசிய நடிகர் விஜய் சேதுபதியை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகக் கருதி இணையத்தில் கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு (தவெக) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே உருவான ஒரு விளையாட்டுச் சூழலை வைத்துத் தலைமைத்துவம் குறித்துத் தம்பி விஜய் சேதுபதி பொதுவான கருத்துக்களையே முன்வைத்தார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. அப்படியிருக்க, அதைக் தாங்களாகவே தங்களது தலைவருக்கு எதிராகப் பேசியதாகப் பொருள் கற்பித்துக்கொண்டு, கருத்து சொன்னவரையே தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தவெக-வினரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சீமான், “தலைமைத்துவம் பற்றிய ஒரு பொதுவான கருத்தே உங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறது என்றால், எதிர்காலத்தில் ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா மற்றும் சகிப்புத்தன்மையா?” என வேதனையுடன் வினவியுள்ளார். தனக்குப் பிடித்தமான கருத்துக்களை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகமாகாது என்றும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தனக்கு எதிரான கருத்துக்களையும் பேச அனுமதித்து, அதற்குச் சரியான கருத்தால் பதில் அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம்” என்று கூறியுள்ள சீமான், ‘ஜனநாயகன்’ என்று படம் எடுத்தால் மட்டும் போதாது, உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும் என்றும் மறைமுகமாகத் தவெக தலைமையை விமர்சித்துள்ளார். கருத்துரிமையை முடக்க முற்படாமல், நாகரிகமான முறையில் அரசியல் பண்பாட்டோடு எதிர்வினையாற்ற வேண்டும் என அவர் விடுத்துள்ள இந்த அறிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.