ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வரும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ‘லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைச் சட்டம் 2026’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சட்டமாக உருவெடுத்துள்ளது.
உக்ரைன் மீதான போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தை ரஷ்யா திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடிச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிபொருள் வாங்கும் முக்கிய 5 நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரிகளை விதிக்க அதிபருக்கு முழு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதன்மையான இலக்காகக் கருதப்படுவதால், அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், உடனடியாக 100% வரி நடைமுறைக்கு வந்துவிடாது என்றும், நாட்டின் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வரியை விதிக்காமல் இருக்க அல்லது குறைக்க அதிபர் டிரம்பிற்குச் சிறப்பு விலக்கு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறை ரஷ்யாவிடம் அதிக எரிபொருள் வாங்கும் நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து புதுப்பிக்கும் என்பதால், இந்திய வர்த்தகத் துறை மீது தொடர் அழுத்தம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் முதன்மை முன்னுரிமை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப எரிபொருள் கொள்முதல் தொடரும் என்றும் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.