Posted in

மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்து கொடூர தாக்குதல்: கோவையில் பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை குஞ்சூர் பதி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதுடன், மாணவி ஒருவரை குச்சியால் அடித்து காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியாவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை எனப் புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் முறையாக வருவதில்லை எனக் கூறி, பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

இதனிடையே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி, அவரை தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா குச்சியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளியின் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் தவளைகள் கிடப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் குறைபாடுகள் இருப்பதாகவும் பெற்றோர் சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.

இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழுவினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாணவர்களைக் கல்வி சாராத வேலைகளில் ஈடுபடுத்தியதும், மாணவியை உடல்ரீதியாகத் தாக்கியதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.