சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகியுமான வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தற்போதைய சுகாதார நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையைப் பல்வேறு துறைகளைச் சார்ந்த மூத்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்குத் தேவையான சளி வெளியேற்றம் மற்றும் சுவாச ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் அளிக்கும் தீவிர சிகிச்சைக்கு அவரது உடல்நிலை தற்போது நல்லபடியாக ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே (ICU) வைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அதன் பிறகு உடல்நிலை முழுமையாகச் சீரடைந்ததும் பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் குடும்பத்தினரின் விளக்கம் தொண்டர்களிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
75 வயதான மூத்த அரசியல்வாதியான வி.எஸ்.பாபு, கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் தவெக தொண்டர்களும் அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.