Posted in

காலையில் எழுந்ததுமே… இது தமிழ்நாடுதானா? – சென்னை விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு சிபிஎம் கடும் கண்டனம்!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தின் தற்போதைய நிர்வாக அமைப்பான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றிவிட்டு, புதிய தனியார் நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசே முன்வந்து பொதுத்துறை விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கோருவது இந்திய வரலாற்றிலேயே முதன்முறை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மூத்த தலைவர் ஆ. கனகராஜ் கடுமையாகக் சாடியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்கு கையாளும் திறன் ஆகியவற்றை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த தற்போதைய நிர்வாகம் போதுமானதாக இல்லை எனக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் விஜய் இக்கடிதத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் தலைவர் கனகராஜ், “காலையில் இந்தச் செய்தியைப் பார்த்ததும் ‘இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?’ என்ற அதிர்ச்சி ஏற்பட்டது. சேவை சரியில்லை என்பதற்காக அரசு நிறுவனத்தை அப்படியே தனியாரிடம் ஒப்படைப்பது எப்படிச் சரியான தீர்வாகும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பிற மாநிலங்களில் மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க முயன்ற போது, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு “நாங்களே விமான நிலையத்தை நடத்துகிறோம்” என்று உரிமை கோரியதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசே தானாக முன்வந்து தனியாருக்கு வழங்கக் கோருவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். மேலும், “நாளை அரசுத்துறை ஒன்று சரியாகச் செயல்படவில்லை என்றால், முழு அரசாங்கத்தையுமே தனியாரிடம் கொடுத்துவிடுவீர்களா?” என்றும் அவர் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.

காஞ்சிபுரம் பரந்தூரில் திட்டமிடப்பட்ட புதிய பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தை அண்மையில் அரசு கைவிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை விமான நிலையத்தையே தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பதாக அரசியல் களம் சூட பிடித்துள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படாமல் இவ்வளவு அவசரமாக இப்படிப்பட்ட முடிவு எப்படி எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள், இக்கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.