மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட (Ph.D) ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு, ‘அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் நிலுவையில் இருந்த ரூ.23.95 லட்சம் நிதியை ஒரே நாளில் விடுவித்துத் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவரின் உயர் கல்விப் படிப்பு எந்தவித தடங்கலுமின்றித் தொடர வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அவசர நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பின் இரண்டாவது ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவு மற்றும் ஆராய்ச்சி உதிரிபாகங்கள் (Research Materials) வாங்குவதற்காக இந்த ரூ.23.95 லட்சம் தொகையைச் சமூக நலன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கு ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.12.21 லட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள தொகையும் விடுவிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.36 லட்சமும் முழுமையாகக் கிடைத்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிக்கு மாணவர் பாரதிதாசன் தரப்பில் இருந்து முறையான கட்டணப் பில்கள் (Bills) மற்றும் ஆவணங்கள் அரசுக்கு இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. பொதுவாக அயலகக் கல்வி உதவித்தொகை விதிகளின்படி பழைய செலவின பில்களைச் சமர்ப்பித்த பிறகே அடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படும் என்ற போதிலும், மாணவரின் கல்வி பாதிக்கப்பட்டவிடக் கூடாது என்ற மனிதநேய அடிப்படையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவைத் தொடர்ந்து, முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின் பேரில் இக்காலகட்டத்தில் எவ்விதத் தாமதமும் இன்றி நிதி நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிவேக நடவடிக்கைக்கு மாணவர் பாரதிதாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.