Posted in

டயானாவின் மரணச் செய்தியைக் கேட்டு மறைந்த மகாராணி எரிச்சலடைந்தார்: தகவலையும் உறுதிப்படுத்திய சகோதரர்!

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் (Earl Spencer) எழுதியுள்ள புதிய சுயசரிதை நூலில், 1997-இல் டயானாவின் கார் விபத்துச் செய்தியை முதன்முதலில் கேட்டபோது மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி மிகுந்த எரிச்சலுடனும் கோபத்துடனும் (Tetchily) எதிர்வினையாற்றினார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தான் எழுதியுள்ள ‘ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்’ (Swan Song: Diana, My Sister) என்ற புத்தகத்தில், டயானாவின் மரணத்தின் போது ராஜ குடும்பத்தின் அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, பாரிஸில் டயானா விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்ததும் மகாராணி எலிசபெத் பதற்றமடைவதற்குப் பதிலாக, “இப்போது அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?” என்றவாறு கோபத்துடனும் சலிப்புடனுமே கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், டயானாவின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு பறிக்கப்பட்ட ‘HRH’ பட்டத்தை மீண்டும் வழங்க மகாராணி முன்வந்தபோதிலும், டயானா இறந்த பிறகு இதில் என்ன பயன் எனக் கூறி தாமே அதை நிராகரித்துவிட்டதாக ஏர்ல் ஸ்பென்சர் விவரித்துள்ளார்.

இதனிடையே, டயானா இறந்த சில மணி நேரங்களிலேயே தற்போதைய மன்னரான (அன்றைய இளவரசர்) சார்லஸ் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, லாட்டரி வென்றவரைப் போல மிகுந்த மகிழ்ச்சியோடு பேசுவது போலத் தோன்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடக்கம் செய்யும் ஊர்வலத்தில் வில்லியம் மற்றும் ஹாரியை நடக்க வைப்பது குறித்த வாக்குவாதத்தின் போது, “நாங்கள் விரைவில் அவளை மறந்துவிடுவோம்” என்று சார்லஸ் கூறியதாக ஏர்ல் ஸ்பென்சர் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம், “புத்தகங்களுக்குப் பதிலளிப்பது வழக்கமில்லை என்றாலும், உடன் பிறந்தவரை இழந்த துயரம் காலப்போக்கில் ஒருவரின் நினைவுகளையும் தீர்ப்புகளையும் பாதிக்கக்கூடும் என்பதை மன்னர் உணர்ந்துள்ளார்” எனத் தெரிவித்தது. இருப்பினும், பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதை மறுத்துள்ள ஏர்ல் ஸ்பென்சர், “நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை; அந்த வார்த்தைகள் இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கின்றன” எனத் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.