ஆந்திராவில் 10-ஆம் வகுப்பு மாணவியை ரம்பத்தால் தாக்கிய வழக்கு குற்றவாளிக்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் வலதுகால் அகற்றப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வகுப்பறைக்குள் புகுந்த ஹேமந்த் (21) என்ற இளைஞர், 10-ஆம் வகுப்பு மாணவியைக் கடப்பாரை மற்றும் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான ஹேமந்தைப் பிடிக்கும் முயற்சியில், ஆத்மகூர் வனப்பகுதியில் அவர் காவல்துறையினரைத் தாக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவருடைய இரு கால்களிலும் குண்டடிபட்டது.
அனந்தபூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமந்திற்கு, வலதுகாலில் ரத்த ஓட்டம் தடைபட்டுப் புண் தீவிரமடைந்ததால் (Gangrene), மருத்துவர்கள் திங்கள்கிழமை இரவு அவரது வலதுகாலை முழங்காலுக்கு மேல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியின்றித் தற்போது தேறி வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தனிப்பட்ட விசாரணை கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஹேமந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், குணமடைந்த பிறகு அவர் மீது கொலை முயற்சி மற்றும் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.