சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீனா தலைமையிலான மத்திய வங்கிகளால் உருவாக்கப்பட்ட ‘எம்-பிரிட்ஜ்’ (mBridge) எனும் டிஜிட்டல் நாணயக் கட்டமைப்புத் திட்டத்தில் இருந்து சவுதி அரேபியா திடீரென விலகியுள்ளது. சவுதி மத்திய வங்கி (SAMA) இத்திட்டத்திலிருந்து தனது பங்கேற்பை முடித்துக் கொண்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 2024-இல் இத்திட்டத்தில் இணைந்த சவுதி, சோதனை அடிப்படையிலான முதற்கட்ட ஆய்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து வழக்கமான நடைமுறைப்படி இதிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் உலகளாவிய வங்கிகளிடையே அமெரிக்க டாலர் மற்றும் ‘ஸ்விஃப்ட்’ (SWIFT) பணப்பரிவர்த்தனை முறையைச் சாராமல், டிஜிட்டல் நாணயங்கள் மூலம் நேரடியாகப் பணப்பரிவர்த்தனை செய்ய எம்-பிரிட்ஜ் தளம் உருவாக்கப்பட்டது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாட்டின் மத்திய வங்கிகளுடன் சேர்ந்து சவுதி அரேபியாவும் இதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், சர்வதேச வர்த்தகத்தில் மாற்று வழிமுறையை உருவாக்கவும் சீனா முன்னெடுத்த முக்கிய நகர்வாக இது பார்க்கப்பட்டது.
இருப்பினும், சவுதியின் இந்தத் திடீர் விலகலின் பின்னணியில் தீவிர புவிசார் அரசியல் மற்றும் அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் இருப்பதாக சர்வதேசப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிராக மாற்று டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க முயலும் நாடுகளுக்குக் கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையும், மத்திய கிழக்கில் தொடரும் பாதுகாப்புப் பதற்றங்களும் சவுதியின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே பன்னாட்டுச் செலுத்துகை வங்கி (BIS) கடந்த 2024-இல் இத்திட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது மத்திய கிழக்கின் முன்னணி பொருளாதார சக்தியான சவுதி அரேபியாவும் வெளியேறியிருப்பது சீனாவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சவுதி அரேபியா விலகினாலும், சீனா மற்றும் பிற கூட்டணி நாடுகள் தொடர்ந்து எம்-பிரிட்ஜ் தளத்தை வணிக பயன்பாட்டிற்கு விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.