இஸ்ரேலின் புனித நாளான யோம்கிப்பூர் (Yom Kippur) வழிபாட்டின் தொடக்கத்தைக் கொண்டாடுவதற்காக மேற்கு கரையில் உள்ள இயற்கை நீர் ஊற்றில் நீராடச் சென்ற இஸ்ரேலியர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு கரையின் நெவே த்சுஃப் (Neve Tzuf) குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள நீர் ஊற்றுப் பகுதியில் காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தீவிர காயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க இஸ்ரேலியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த உடனே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காரில் இருந்து இறங்கித் தப்பிச் செல்ல முயன்ற போது, பாதுகாப்புப் பணிக்காகக் காவலில் இருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் பிஞ்சமின் பிரிகேட் வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் காயப்படுத்தினர். எனினும், காயமடைந்த தாக்குதல்தாரி மீண்டும் தனது காரில் ஏறித் தப்பிச் சென்று, ராமல்லா (Ramallah) பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் புகுந்து சிகிச்சை பெற முயன்றதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.
தாக்குதல்தாரியைப் பிடிக்க இஸ்ரேலிய உளவு அமைப்பான ஷின் பெட் (Shin Bet) அளித்த துல்லியமான தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் ராணுவத்தின் துவ்தேவான் கமாண்டோ படைப்பிரிவினர் ராமல்லா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கிருந்த தாக்குதல்தாரியைக் கைது செய்தனர். மேலும், மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்தாரியின் வாகனத்தையும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் ராணுவத்தினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எந்தவொரு பயங்கரவாதியும் தப்பிக்க முடியாது” என்றும், மேற்கு கரையில் கூடுதல் படைகளைக்வித்து சோதனைகளைத் தீவிரப்படுத்தவும், தாக்குதல்தாரியின் வீட்டை உடனடியாக இடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். யூதர்களின் புனித திருநாளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அரங்கேறியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல், மேற்கு கரை பகுதியில் மீண்டும் கடுமையான பதற்றத்தையும் பாதுகாப்பு கவலையையும் உருவாக்கியுள்ளது.