Posted in

மாஸ்கோவைக் குலுக்கிய உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: 2 பேர் பலி; எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிந்தது!

ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வந்த சூழலில், தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்காகக் கொண்டு உக்ரைன் இராணுவம் 1,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா நவீன ட்ரோன் விமானங்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரம்மாண்டத் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான ஆட்சியின் கீழ் நடைபெற்ற இந்தத் தேர்தலில் இடையூறு விளைவிக்கும் நோக்கில் மாஸ்கோவை மட்டுமே இலக்காகக் கொண்டு 450-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடித் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் 74 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண் உட்பட 2 பேர் உயிரிழந்ததோடு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், ட்ரோன் பாகங்கள் விழுந்து 21 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 1,100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இத்தாக்குதலில் மாஸ்கோவின் எரிபொருள் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் முக்கிய ‘கபோட்னியா’ (Kapotnya) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பலத்த சேதமடைந்து தீப்பற்றி எரிந்தது. உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ‘ஃபிளமிங்கோ’ மற்றும் ‘பெலிகன்’ ரக நீண்டதூரம் பாயும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் போர் நிதியாதாரமாக விளங்கும் எரிசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளில் இந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அக்கிரமிப்புப் போருக்கு எதிராக உக்ரைன் தனது சொந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய நீண்டதூர தாக்குதல் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடத்தி வரும் இந்த பதிலடித் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.