தமிழகத்தையே உலுக்கியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை (போக்சோ) விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், “இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் துணையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீதும் தயவுதாட்சணியமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தொல். திருமாவளவன், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் கல்வி உதவி என்ற பெயரில் வரவழைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாகத் தெரிவித்தார். சமுதாயத்தின் விளிம்புநிலைச் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தகைய அருவருக்கத்தக்கக் குற்றங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனியச் செய்துள்ளதாகக் கொதிப்புடன் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் முறையான விசாரணையை நடத்தத் தவறிய உயர் அதிகாரிகள் மீதும், ஆதாரங்களை மறைக்க முயன்றவர்கள் மீதும் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய நீதி மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டியது அரசின் முதமைக் கடமையாகும் எனத் தெரிவித்தார்.
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், திருமாவளவனின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இத்தகைய சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாத வண்ணம் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.