வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள ரிம்பி (Rimbi) கிராமத்தில் பிரம்மாண்ட நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. மலையிலிருந்து பாறைகளும் சேறும் சகதியும் கிராமத்தை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுக்சோம்-தாஷிடிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரிம்பி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் இருந்து சரிந்து வந்த பெரும் மண் மற்றும் பாறைக் குவியல்கள், மின்சாரத் துறையின் அரசு குடியிருப்புகள் உட்படப் பல வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை விளைவித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.
நிலச்சரிவின் வேகம் அதிகரித்து வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர் மழை காரணமாக நிக் கோல்சா ஆற்றின் வழியே நீர்வரத்து அதிகரித்து, ஆற்றோரப் பகுதிகளில் பெருமளவு சேறும் சகதியும் தேங்கியுள்ளன. மேலும், அப்பகுதியில் இருந்த பாலங்களும், ரிம்பி – யுக்சோம் இணைப்புச் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்பப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு அபாயம் உள்ள ஆபத்தான பகுதிகள் மற்றும் ஆற்றோரங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் நிலச்சரிவுகள் கிராம மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.