Posted in

நிஜ வாழ்க்கை ‘பேட்மேன்’: திருடனைத் துரத்திச் சென்று ஹேண்ட்பேக்கை மீட்ட வாலிபர் – இணையத்தில் வைரல் வீடியோ!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர வீதியில் பெண்ணிடம் இருந்து கைப்பையைத் (Handbag) திருடிச் சென்ற திருடனை, ‘பேட்மேன்’ உடை அணிந்த நபர் ஒருவர் துரத்திச் சென்று சுவரில் ஏறிப் பையை மீட்டுத் தந்த சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மான்செஸ்டர் நகரில் வார இறுதி இரவில் பார்ட்டியில் பங்கேற்பதற்காகப் ‘பேட்மேன்’ (Batman) திரைப்படக் கதாபாத்திரத்தின் ஆடையை அணிந்து வந்த வாலிபர் ஒருவர், வீதியில் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டுள்ளார். உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்ட அந்த வாலிபர், திரைப்படங்களில் வருவது போலவே திருடனைத் தீவிரமாகத் துரத்தத் தொடங்கியுள்ளார்.

பேட்மேன் உடையில் இருந்த நபர் தன்னை விடாமல் துரத்தி வருவதைக் கண்டு அஞ்சிய திருடன், கைப்பையை அருகில் இருந்த உயரமான மதிலின் மேல் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளான். இதையடுத்து, சிறிதும் யோசிக்காத அந்த வாலிபர், உடனடியாகச் சுவரில் ஏறி மதிலின் உச்சியில் இருந்த கைப்பையைக் கைப்பற்றி, அதை உரிய பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

திரைப்படக் காட்சியைப் போல நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்கள் கைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், “நிஜ வாழ்க்கையிலும் பேட்மேன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” எனக் நெட்டிசன்கள் அந்த வாலிபரின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர்.