இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பல்லிளிக்கப் போவதாகவும், களநிலவரம் குறித்த உளவுத்துறை அறிக்கை முதல்வர் கைகளுக்குச் சென்றதால் ஏற்பட்ட தோல்வி பயத்தினாலேயே மதுராந்தகம் பிரச்சாரத்தில் அலறித் துடிக்கிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அண்மையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட உரைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பகிரங்கமாக நடைபெற்ற அரசியல் பேரங்களை மறைப்பதற்காகவே திசைதிருப்பும் பேச்சுக்கள் பேசப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
திரைத்துறையில் இருந்தபோது கிடைத்த வரவேற்பும், ஆட்சிக்கு வந்த பிறகு கிடைத்த மக்கள் ஆதரவும் முற்றிலும் வெவ்வேறானவை என்று சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே உண்மையான நிலவரத்தைக் வெளிச்சம்போட்டு காட்டும் என்றார். தேர்தல் களத்தில் மக்கள் தங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்ற நிதர்சனமான உளவுத்துறை அறிக்கை முதல்வரின் கைகளுக்குச் சென்று சேர்ந்துள்ளதாகவும், அதனாலேயே அவசர அவசரமாக மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திப் பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் சாடினார்.
கட்சியின் ஆரம்பக்கால உண்மையான தொண்டர்களுக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தராமல், பிற கட்சிகளிலிருந்து அடைக்கலமானவர்களுக்குத் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை அள்ளி வழங்குவதே கட்சியின் பலவீனத்தையும் தோல்வி முகத்தையும் காட்டுகிறது என்று ஆர்.பி. உதயகுமார் சுட்டிக்காட்டினார். அதிமுக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் வீறுநடை போட்டு வருவதாகவும், மக்கள் விரோத ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தல் தகுந்த பாடம் புகட்டும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.