பிரிட்டனின் க்ளௌசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள அமெரிக்க விமானப் படை பயன்பாட்டில் உள்ள ‘ஆரெஃப் பேர்போர்ட்’ (RAF Fairford) ராணுவ விமானத் தளத்திற்கு அருகே வெடிபொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலரை பிரிட்டிஷ் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
—
பிரிட்டனின் தென்மேற்குப் பகுதியிலுள்ள வெல்ஃபோர்ட் கிராமப் பகுதியில் வெடிபொருட்கள் சட்டப் பிரிவின் கீழ் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் உலாவுவதாகக் கிடைத்த உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, க்ளௌசெஸ்டர்ஷையர் காவல்துறை அப்பகுதியைத் ‘தீவிரப் பாதுகாப்பு மண்டலமாக’ (Major Incident) அறிவித்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயுதம் ஏந்திய அதிரடிப் படையினர், சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை ராணுவத்தின் வெடிபொருள் நிபுணர் குழுக்கள் (Bomb Disposal Squad) தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானத் தளத்தின் முதன்மை நுழைவாயில் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரானுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த ‘ஆரெஃப் பேர்போர்ட்’ தளம் பயன்படுத்தப்பட்டு வருவதால், இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சூழல் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க விமானப் படைப்பிரிவும் தனது வீரர்களின் பாதுகாப்பை உச்சகட்ட எச்சரிக்கையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.