Posted in

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மீது மீண்டும் தாக்குதல்: மருத்துவமனை இடிபாடுகளிலிருந்து தப்பியதாக தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) படுகாயமடைந்த நிலையிலும் இரண்டாவது தாக்குதலிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் நிபுணர்கள் அவையின் (Assembly of Experts) மூத்த உறுப்பினரான மொஹ்சென் ஹெய்தாரி (Mohsen Heydari), கட்டார் நாட்டைச் சேர்ந்த அல் அரபி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலின் போது மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக டெஹ்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகளையும் இலக்கு வைத்து அடுத்தடுத்து குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாக மொஹ்சென் ஹெய்தாரி தெரிவித்துள்ளார். டெஹ்ரானில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில், மொஜ்தபா கமேனி சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்தது. கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புக் குழுவினர் அவரை இடிபாடுகளிலிருந்து பத்திரமாக மீட்டு ரகசிய இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

இரண்டாவது தாக்குதலுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் இதுவரை நேரில் தோன்றவில்லை. ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக அவர் மார்ச் 8 அன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஈரான் அரசு தரப்பில் பல்வேறு முரண்பாடான தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இடிபாடுகளிலிருந்து அவர் மீட்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.