பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான ‘ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்ட்’ (RAF Fairford) அருகே வெடிபொருட்களுடன் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்கள் அமெரிக்கப் படைகள் மீது “பிரம்மாண்டச் சேதத்தை” விளைவிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களைத் தங்களின் உளவு அமைப்புகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்ட் ராணுவ விமானத் தளத்தை நோக்கி 3 சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதம் தாங்கிய பிரித்தானியக் காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து 5 பேரைக் கைது செய்தனர். சோதனை நடத்தியதில் அப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (IED) கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 85 வீடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்துச் சிகாகோவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், “பிரித்தானிய காவல் துறையினருடன் இணைந்து எங்களது உளவுத்துறை முன்னெடுத்த மிகச் சிறந்த நடவடிக்கை இது. கைது செய்யப்பட்ட நபர்கள் எங்களது ராணுவத் தளத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தனர்; நீண்டகாலமாக அவர்கள் எங்களின் கண்காணிப்பில் இருந்தனர்” எனக் கூறி, தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதை உறுதி செய்தார்.
இந்தத் தாக்குதல் சதியின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸாரும் உளவு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அமெரிக்காவின் பி-1 மற்றும் பி-52 ரகப் போர் விமானங்கள் இந்த விமானத் தளத்தில் இருந்தே ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், இத்தளத்தை இலக்கு வைப்போம் என ஈரான் புரட்சிகரக் காவல் படை (IRGC) எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.