Posted in

கிம் ஜோங் உன் 140 கிலோ எடையுடன் தீவிர உடல் பருமனாக உள்ளார்: தென்கொரிய உளவு அமைப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் 140 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் “அதிதீவிர உடல் பருமன்” (Extremely Obese) கொண்டவராக இருப்பதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு (NIS) தெரிவித்துள்ளது. தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் யூன் குன்-யங் ஊடகங்களிடம் பகிர்ந்த தகவலின்படி, கிம் ஜோங் உன்னிற்கு இதய நோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான அதிக அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது அவரது உடலில் தீவிர மருத்துவப் பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், படிக்கட்டுகளில் ஏறுவது உள்ளிட்ட உடல்சார்ந்த செயல்பாடுகளில் சிரமங்கள் ஏதுமில்லை என்றும் உளவு அமைப்பு கணித்துள்ளது.

அவரது உடல்நிலையைக் கண்காணிக்கச் பிரத்யேக மருத்துவக் குழு செயல்பட்டு வருவதாகவும், அவரது தந்தை கிம் ஜோங் இல் மற்றும் தாத்தா கிம் இல் சுங் ஆகியோரும் உடல் பருமன் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜூ-ஏ (Kim Ju-ae) வடகொரியாவின் அடுத்தகட்ட வாரிசாக உருவாக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கிம் ஜோங் உன்னின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. அணு ஆயுத வல்லமை கொண்ட நாட்டின் தலைவராக இருப்பதால், அவரது ஆரோக்கியம் தொடர்பான தகவல்களைத் தென்கொரிய மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகின்றன.