Posted in

இஸ்ரேல் விமானத்தை தற்கொலைத் தாக்குதலில் இருந்து மீட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார்

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் (flydubai) விமானத்தில், விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க முயன்ற துணை விமானியைத் தடுத்துப் போராடிய தலைமை விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் (Smit Machchhar) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையிலும் அவர் விமானத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் த இந்து நாளிதழ்களின் செய்திக் குறிப்புகளின்படி, துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்குப் பறந்த எஃப்.இசட் 1073 (FZ1073) போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் இந்த மோதல் நடந்துள்ளது. ஓமானைச் சேர்ந்த துணை விமானி, கத்தியால் தாக்குதல் நடத்தி விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றபோது, இந்தியரான கேப்டன் ஸ்மித் மச்சார் அவரைத் தடுத்துப் போராடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையிலும் அவர் எச்சரிக்கை மணி எழுப்பவே, பயணித்த இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் கோக்பிட்க்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டிப்போட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விமானம் நடுவானில் பல ஆயிரம் அடிகள் வரை திசைமாறி இறங்கியதால் பய பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. பின்னர் விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமானத்தை நொறுக்க முயன்ற முயற்சியை இந்திய விமானியும் பயணிகளும் வீரம் செறிந்த முறையில் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிளைதுபாய் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இது விமானிகளுக்கு இடையேயான மோதல் என்றும், இதன் பின்னணி மற்றும் காரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி இஸ்ரேலுக்கு இயக்கப்படும் பிளைதுபாய் சேவைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர மறுஆய்வு செய்து வருகின்றனர்.