Posted in

விமானத்தை வீழ்த்த முயன்ற உதவி விமானி தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபாய் (flydubai) விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி, முதன்மை விமானியான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் என்பவரைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றுள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல் நடத்திய உதவி விமானி தீவிரவாத இஸ்லாமிய சித்தாந்தப் பிரச்சாரத்திற்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமானி ஸ்மித் மச்சார் படுகாயமடைந்த நிலையிலும், காக்பிட் கதவைத் திறந்து பயணிகள் மற்றும் ஓய்வில் இருந்த சக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாகச் செயல்பட்ட பயணிகள் உதவி விமானியை மடக்கிப் பிடித்ததை அடுத்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தற்போது படுகாயமடைந்த இந்திய விமானி சவூதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்திய உதவி விமானி சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ராஜதந்திர உறவுகள் இல்லாத நாடுகளின் விமானப் பணியாளர்களை இஸ்ரேலிய வான்வெளியில் அனுமதிப்பதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தத் தாக்குதலில் ஈரானுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ மற்றும் ‘சிபிஎஸ் நியூஸ்’ ஊடகங்களின் தகவல்படி, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

தற்போது சவூதி அரேபியாவில் விசாரணையில் இருக்கும் உதவி விமானியிடம் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன. விமானத்தில் இருந்த இஸ்ரேலியப் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் டெல் அவிவ் நகரத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகள் மற்றும் பணியாளர்களின் பின்னணிப் பரிசோதனை முறைகளைக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.