Posted in

பிரான்ஸில் பள்ளிகள் முற்றுகை: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்; ஆயிரக்கணக்கானோர் கைது!

பிரான்ஸ் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, கூடுதல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்விக்கூட நிதிக்குறைப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளின் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டு, மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இப்போராட்டங்களின் போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. நான்ட்ஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் முன்பகுதி தீக்கிரையானதுடன், மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே தீவைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் சுமார் 1,949 பேர் கைது செய்யப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

மாணவர்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், தீவிர வன்முறை சம்பவங்களுக்குப் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கவலை தெரிவித்துள்ளார். கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் வன்முறை வழிகளில் போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டங்கள் காரணமாகப் பல இடங்களில் பொதுப்போக்குவரத்து சேவைகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பிரதமர் தலைமையில் அவசரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பல பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குப் பதிலாக இணையவழி வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பிரெஞ்சு கல்வி அமைச்சர் எடுவார்ட் கெஃப்ராய் மாணவர் அமைப்புகளுடனும் பெற்றோர் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.