மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டணிக் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெகவைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இடதுசாரித் தலைவர்களை ஆட்சி அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் இணையுமாறு கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அமைந்த தவெக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகளின் பங்கு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, “கம்யூனிஸ்ட் தோழர்களே நீங்களும் அமைச்சரவைக்குள் வாருங்கள்; கொள்கை ரீதியாக நமக்கு எந்தவித வேறுபாடும் கிடையாது” என்று கூறினார். மேலும், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்படும் சிறு கருத்து வேறுபாடுகளால் 2029-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ, விசிக, ஐஎம்எல் போன்ற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழையாதபடி தவெக ஆட்சியைத் தொடர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இடதுசாரிகளை எதிர்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், மக்கள் நலன் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை வலுப்படுத்துவதே தங்களின் முக்கியக் குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் வேடிக்கை பார்த்தது போல இல்லாமல், தற்போது இணைந்து செயல்பட்டு வெற்றி கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என அவர் மேடையில் அழைப்பு விடுத்தார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் அரசியல்கள சூழலில் இடதுசாரிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள இந்த அழைப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.