Posted in

இஸ்ரேல் விமான கடத்தல் முயற்சி பின்னணியில் ஈரான்? டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘பிளைதுபாய்’ (FlyDubai) பயணிகள் விமானத்தை அதன் உதவி விமானி கடத்தி விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவத்தில், ஈரானின் தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரானுக்குப் பங்கிருப்பதாகத் தகவல் கிடைத்தால் அந்நாடு “மிகக் கடுமையாகத் தாக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில், உதவி விமானி திடீரென அதன் முதன்மை இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தி விமானத்தைக் கீழே இறக்க முயன்றார். காயமடைந்த போதிலும் கேப்டன் ஸ்மித் காக்பிட் கதவைத் திறந்ததால், பயணிகளும் மற்ற ஊழியர்களும் தலையிட்டு உதவி விமானியைக் கட்டுப்படுத்தி சவுதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். கைது செய்யப்பட்டுள்ள உதவி விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் தீவிரவாதக் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இச்செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் சவுதி அரேபியாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈரானின் தொடர்பு குறித்து இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை என்றும், அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தீவிரவாத சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், இது ஒரு கடத்தல் முயற்சியைப் போலவும் விமானத்தை வீழ்த்தும் முயற்சியைப் போலவும் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஓமன் நாட்டு உதவி விமானியின் பின்னணி, அவருக்கு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா மற்றும் காக்பிட்டிற்குள் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது எப்படி என்பது குறித்துச் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்புகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.