அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி ஊராட்சியில் பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், காய்கறிச் சந்தை மற்றும் கோவிலுக்கு அருகில் இந்த மதுக்கடை செயல்படுவதால் அவ்வழியாகச் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அவகாசங்கள் முடிவடைந்த பின்னரும் கடை தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாகக் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மதுக்கடையை மூடக்கோரி கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இப்பகுதியில் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பாகத் தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களின் நிம்மதியை விட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே அரியலூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் கார்குடி மதுபானக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.