வடகொரியாவில் 1990-களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அங்கு நிலவிய மனிதப் பேரவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கதி செல்வேகர் (Kathi Zellweger) என்ற தொண்டு நிறுவன அதிகாரி தான் படம்பிடித்த இந்த அரிய ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வடகொரியாவில் 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் ‘கடினமான அணிவகுப்பு’ (Arduous March) என்று அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அந்நாட்டில் சுடாரமான பொருளாதாரச் சரிவு மற்றும் போதிய உணவின்மையால் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் முதல் பல லட்சம் மக்கள் வரை உயிரிழந்ததாக சர்வதேசக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் அரசாங்க ஆதரவு பெற்ற கத்தோலிக்கத் தொண்டு நிறுவனத்தின் மூலம் 25 ஆண்டுகளில் 75 முறைக்கும் மேல் வடகொரியா சென்ற கதி செல்வேகர், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட காட்சிகளைத் தனது கேமராவில் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நான்கு மற்றும் ஐந்து வயதான குழந்தைகள் கூட முதியவர்களைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தடைகள், தவறான விவசாயக் கொள்கைகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாகவே வடகொரிய மக்கள் இத்தகைய பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, அந்நாட்டு அரசாங்கம் மக்கள் பட்டினியால் வாடியபோதும் ஆயுதப் பெருக்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தற்போது பல தசாப்தங்கள் கழித்து வெளியாகியுள்ள இந்த அரிய புகைப்படங்கள், வடகொரிய வரலாற்றுப் பதிவுகளில் முக்கியச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன. தற்போதும் அந்நாட்டில் அவ்வப்போது உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கடந்த காலப் பேரழிவின் நினைவூட்டலாக இந்த வரலாற்றுப் படங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.