அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 9) தீர்ப்ப வழங்கவுள்ளது.
கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் அவசர அவசரமாக ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எஸ். ஜெயக்குமார், கே. மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, டாக்டர் இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாக்களை ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா செய்தனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகே ஏற்றுக்கொண்டதாக வாதிட்டார். மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் அவரது விருப்பத்திற்கு மாறாகப் பதவியில் தொடர வற்புறுத்த முடியாது என்றும் சபாநாயகர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் இந்த முக்கிய தீர்ப்பும் வரவிருப்பதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.