நடிகர் அஜித்குமாரை 2031 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கில், அவரது ரசிகர்களால் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை போரூரை அடுத்த கோவூரில் இந்த அங்கீகரிக்கப்படாத அமைப்பின் செயற்குழு கூட்டம் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அஜித்தின் முழு உருவச் சிலையை நிறுவிய ரசிகர்கள், பாலாபிஷேகம் செய்தும் 108 தேங்காய்களை உடைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மேலும் வேளாங்கண்ணியிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரைக் கொண்டு அஜித்தின் சிலையைப் புனிதப்படுத்திய ரசிகர்கள், கோவூர் பகுதியில் 3,000 சதுர அடி பரப்பளவில் அஜித்துக்காகக் கோயில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். 2031 தேர்தலில் வெற்றி பெற்று அஜித் முதலமைச்சராக ஆட்சி அமைப்பார் எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் முழக்கமிட்டனர். ஆனால், திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அஜித், தனது பெயரில் ரசிகர் மன்றங்கள் செயல்படுவதைக் கூட விரும்புவதில்லை என்பதால் ரசிகர்களின் இந்த நடவடிக்கை இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தன்னை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்களின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து நடிகர் அஜித்குமார் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கார் பந்தயம் மற்றும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அஜித்தின் மௌனம் காரணமாக அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.