Posted in

ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

தனியார் பள்ளிகளுக்குக் கட்டட அனுமதி, நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அமிஞ்சிக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துச் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் அக்டோபர் 26 திங்கள்கிழமை அன்று இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

முன்னதாக, இவ்வழக்கில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே இக்கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

இவ்வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசுக்குமார் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்களின் அடிப்படையில் அன்பில் மகேஷ் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

இந்த கைது செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலைய வளாகப் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய திமுகவினர், அன்பில் மகேஸின் உடல்நிலை மற்றும் அடுத்தகட்ட சட்ட உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக உள்ள பிற நபர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.