திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீது தொடரப்பட்ட ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றக் கெடுபிடிகளும் மனுத் தள்ளுபடிகளும் வெளியாகி வரும் சூழலில், தவெகவின் இணையதளப் பிரிவு (IT Wing) புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களின் முறைகேடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, தற்போது அரசின் செயல்பாடுகள் குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருவது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நியமனங்கள் மற்றும் தனியார் பள்ளி அங்கீகார விவகாரங்களில் லஞ்சக் குற்றச்சாட்டுகள் எழுந்து நீதிமன்ற விசாரணையில் உள்ளன. “சொந்தக் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவாகி வரும் வேளையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்” என்று தவெக ஐடி விங் தனது சமூக வலைதள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது. தவெக அரசின் நிர்வாகம் மற்றும் சட்டம் – ஒழுங்கு குறித்த திமுக தலைவரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சியான தவெகவிற்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையிலான வார்த்தைப் போரும் கருத்து மோதல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.
திமுக தரப்பிலிருந்து தவெக ஐடி விங்கின் இந்த விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.