அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து நியூயார்க் நகருக்கு அக்டோபர் 24 அன்று இரவு புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் எஃப்.ஏ.1681 (UA1681) விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 (Boeing 737 MAX 8) ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 150 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணித்தனர். விமானம் சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவர் தனது தொலைபேசியில் விமானத்தைக் கடத்தப் போவதாகக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்ததை விமானப் பணிப்பெண் ஒருவர் கவனித்துள்ளார்.
உடனடியாக எச்சரிக்கையடைந்த பணிப்பெண் விமானியிடம் விவரத்தைத் தெரிவித்ததை அடுத்து, விமானத்தின் காக்பிட் (Cockpit) பகுதி உடனடியாகப் பூட்டப்பட்டது. மேலும், விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம் உடனடியாக லாஸ் வேகாஸ் விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது. தரையிறங்கியதும் விமானத்தில் இருந்த காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய அந்தப் பயணி மற்றும் சில நபர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த விமானத்தின் பயணம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பயணி மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பு (FAA) விசாரணை நடத்தி வருகிறது.