ஈரானின் அணுசக்தி மையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து 72 மணி நேரத்திற்குள் குறுகிய ஆனால் கடுமையான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானை உடனடியாக ஒப்பந்தத்திற்கு வரப்பணிக்கும் நோக்கில் இந்த வியூகம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மூன்றாவது விமான தாங்கிப் போர்க் கப்பல் படைப்பிரிவை அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அனுப்பியுள்ளது. இ
தன் மூலம் கூடுதலாக 10,000 படைவீரர்களும் அமெரிக்கப் படைகளுடன் இணையவுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 50,000-க்கும் மேலாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் அச்சுறுத்தல்கள் நிலவி வரும் நிலையில், வான்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்தவும் தாக்குதலுக்குத் தயாராகவும் இந்த கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்துப் பேசுகையில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது அல்லது அவர்களது ராணுவத் திறனை முழுமையாக அழிப்பது ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், 72 மணி நேரத்திற்குள் தீவிரத் தாக்குதலை முடிப்பது சாத்தியமா மற்றும் அது போரை மேலும் விரிவுபடுத்துமா என்பது குறித்து சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரானும் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரான் உடனான இந்த முரண்பட்ட சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. வெள்ளை மாளிகையின் இறுதி உத்தரவுக்காக அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.