சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ‘ஈடிஎச் சூரிச்’ (ETH Zurich) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோபோடிக் சிஸ்டம்ஸ் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்த ‘மேனிமால்’ (ANYmal) என்ற ரோபோ நாய் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 40 சென்டிமீட்டர் அளவும் 4.6 கிலோகிராம் எடையும் கொண்ட பிரம்மாண்டமான ரூபிக்ஸ் கியூப் புதிரை, தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி 8 முதல் 9 நிமிடங்களுக்குள் அது முழுமையாகத் தீர்த்து அசத்தியுள்ளது. எந்தவொரு ரோபோடிக் கரங்களும் (Robotic Arms) இல்லாமல் தன் கால்களின் துல்லியமான நகர்வுகளால் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ரோபோ நாயின் உடற்பகுதியில் உள்ள கேமராக்கள் மூலம் ரூபிக்ஸ் கியூபின் அனைத்துப் பக்கங்களையும் முதற்கட்டமாக ஆய்வு செய்து வர்ணங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. அதன் பிறகு, ‘கொசீம்பா அல்காரிதம்’ (Kociemba algorithm) என்ற மென்பொருள் அமைப்பின் மூலம் மிகக் குறைந்த நகர்வுகளில் கியூபைத் தீர்ப்பதற்கான வழியைக் கணக்கிடுகிறது. ஒரு முன்னங்காலால் கியூபைப் பிடித்துக்கொண்டு, மற்ற கால்களால் பக்கங்களைச் சுழற்றி சுமார் 30 நகர்வுகளில் இப்புதிரைச் செய்து முடிப்பதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
தொழில்துறை ஆய்வுப் பணிகள் மற்றும் பேரிடர் கால மீட்புப் பணிகளின் போது கூடுதல் கரங்கள் இன்றி ரோபோக்கள் தங்களது கால்களையே பயன்படுத்திப் பொருட்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தது தொழில்நுட்ப உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது தட்டையான தளங்களில் மட்டுமே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதால், கரடுமுரடான தளங்களிலும் ரோபோ நாயின் செயல்திறனை மேம்படுத்த அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் கடினமான சூழல்களில் தொழிலாளர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.