Posted in

ரூ.634 கோடி லஞ்ச வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டதில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கே.என்.நேரு சார்பில் அவரது வழக்கறிஞர் விஷ்ணு சர்மா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தன் தரப்பு வாதங்களைக் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னதாகவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரின் மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.