உகாண்டா நாட்டின் மசாக்கா, இபண்டா மற்றும் கசோ ஆகிய மாவட்டங்களில் கடந்த 2010 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 38 பேரைக் கொன்று அவர்களது உடல்களைத் தின்றதாக முஜுரிசி மோசே (Mujurizi Moses) என்பவர் மீது தீவிரக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. உகாண்டா பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா, தேடப்பட்டு வந்த இந்தச் சந்தேக நபர் பாதுகாப்புப் படையினரால் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நாட்டின் மிக மோசமான தொடர் கொலைகாரன் மற்றும் நண்ணுண்ணி (Cannibal) எனக் குறிப்பிடப்படும் இவன், வீடுகளுக்குள் புகுந்து குடும்பத்தினரை வெட்டிக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மோசே கடந்த காலங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளபோதிலும், காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடிய வரலாற்றைக் கொண்டுள்ளார்.
இம்முறை பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ராணுவத் தலைமைத் தளபதி சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவன் தனது குற்றச் செயல்களுக்காக வீடுகளின் சுவர்களில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும், பெண்களைத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கோரச் சம்பவங்கள் உகாண்டா நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. காணாமல் போன நபர்கள் தொடர்பான பழைய வழக்குகளுடன் இந்தச் சம்பவங்களை இணைத்து உகாண்டா புலனாய்வுத் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மோசே மீதான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.