Posted in

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: மருத்துவக் காரணங்களைக் கூறி ஜாமீன் கோரிய அன்பில் மகேஷ்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சலுகைகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் வசூலிக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்தான், சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். லஞ்சப் புகாரில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவில், “யாரிடமும் லஞ்சம் பெற்றதாகவோ அல்லது சட்டவிரோத ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டதாகவோ காவல்துறை சார்பில் எவ்வித ஆதாரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தித் தன்னிச்சையாகப் பணம் வசூலித்துள்ளதாகவும், அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்துடன், தனக்குக் கணைய அழற்சி (Pancreatitis) பாதிப்பு உள்ளதால் தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகக் கூறி ஜாமீன் கோரியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்துள்ள இந்த ஜாமீன் மனு மீது காவல்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பில் மகேஷின் ஜாமீன் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவருக்கு நிவாரணம் அளிக்குமா அல்லது மனுவைத் தள்ளுபடி செய்யுமா என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.