Posted in

தேனி சிறை தப்பியோட்டம்: எஞ்சிய கைதிகளைப் பிடிக்க மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் 17 கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில் இதுவரை 13 கைதிகள் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட கைதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எஞ்சிய கைதிகள் சிறையின் பின்புறமுள்ள அம்மாச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த மலைப்பகுதியைச் சுற்றியுள்ள நான்கு புறங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் சிறப்புப் படையினர் மலையேறித் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைிகளைக் விரைவாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கைதிகள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுளன. மேலும், தேனி மற்றும் சுற்றியுள்ள மாவட்டப் பேருந்து நிலையங்களிலும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலைப்பகுதியில் பதுங்கியுள்ள எஞ்சிய கைதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல்துறையின் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை பாதுகாப்பு முறைகள் குறித்த உயர்மட்ட விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.