Posted in

பாரிஸில் வெடித்த 3-வது வாரப் போராட்டம்: 70,000 பேர் திரண்டதால் காவல்துறையுடன் மோதல்!

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் கல்வித்துறை நிலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாடு முழுவதும் 3-வது தொடர்ச்சியான வாரமாக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 70,000 போராட்டக்காரர்கள் பேரணியாகத் திரண்டனர். பேரணியின் போது சரேண்டன் (Porte de Charenton) பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களில் சிலர் வீதிகளிலிருந்த கற்களைப் பிடுங்கி எறிந்தும், மொலோடோவ் (Molotov cocktails) எரி குண்டுகளை வீசியும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

காவல்துறையினர் வான்நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். நாட்டின் லியோன் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கொடிகள் கொளுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நாடு முழுவதும் அசம்பாவிதங்களைத் தடுக்க 70,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடு முழுவதும் 560-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தீவிர இடதுசாரி அரசியல் தலைவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தற்போது பாரிஸ் நகரின் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் புதிய போராட்டங்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.