தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைமன்னார் மற்றும் மன்னார் வடக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை வட மத்திய கடற்படை பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அத்துடன் மீனவர்கள் பயன்படுத்திய ஒரு விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்து கரைக்குக் கொண்டு சென்றனர்.
சனிக்கிழமை அன்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 398 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் மெர்வின் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற 7 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் மறித்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பிளேசியஸ் (41), அழகுபாண்டி (22), அந்தோணி பிச்சை (33), ரபீன் (21), நெல்சன் (58), அருளானந்த சேவியர் (65) மற்றும் சகாய ஆனந்த் (34) ஆகியோர் அடங்குவர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இந்த கைது நடவடிக்கைகள் இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதி மீனவ சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன