Posted in

234 தொகுதிகளிலும் இலவச ஏசி டியூஷன் மையம்: நடிகர் தனுஷ் திட்டத்தால் எழுந்த பரபரப்பு!

நடிகர் தனுஷின் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கப்படும் இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் முதல் படிப்படியாக அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மையத்திற்கும் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளை நற்பணி இயக்கமே ஏற்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாகத் தனது ரசிகர் மன்றத்தை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்து, புதிய கொடி மற்றும் இலச்சினையை அவர் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடிய தனுஷ், அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ‘இரவு பாடசாலை’ மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தியதைப் போல, தனுஷும் முதல்முறை வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறாரா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

எனினும், இலவச டியூஷன் மையங்கள் அமைக்கும் முயற்சி தனுஷின் அரசியல் வருகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்றும், சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியே என்றும் அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 2031 சட்டமன்றத் தேர்தலைக் கவனத்தில் கொண்டே தனுஷ் தனது அமைப்பைப் பலப்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மாவட்டத் தலைநகரங்களில் டியூஷன் மையங்களை அமைப்பதற்கான முதற்கட்டக் களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு இந்த மையங்கள் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை நற்பணி இயக்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.